Oct 15, 2017

சூழ்நிலை தவறோ
சுயசிந்தை தப்போ - திருந்தும்
மனம் கோரும் மன்னிப்பு
தீயில் விழுந்து
உயிர்பெற்ற உயிருக்கு சமம்

வடு நீங்க மருந்து தேடும் போது
அதை குத்தி புண்ணாக்கி
மனம் தன்னை மாய்க்கும்
சொல்லும் செயலும் வேண்டா
செவியோரம் இசையும் கருத்தும் வேண்டா




காமமெனும் கரையேறி 
காதலெனும் வீட்டில் 
உறவு கொள்ளும் உயிர்களில் 

உறங்கா அன்பு ஆடும் 

தோழமை எனும் 
தோகை அழகாய் விரியும்
 
வாக்குவாதம் குறையும் 
வாழ்க்கை வண்ணமயமாகும் 
என்னை பார்த்து வளராதே
நான் வாழ்ந்தது எனது வாழ்வு

உனை ஆராய்ந்து
உள்நோக்கி பார்த்து
பக்குவதோடு பழகி
பல்கி பெருகும் நற்குணம் கொண்டு
அன்பு ததும்ப அரவணைக்கும் கரம் நீட்டி
அண்டமெல்லாம் நின் புகழ் பரவ வாழ் 
நானென்ற கர்வமழிக்க
நாண் தொடுப்போம்
சுயநலமில்லா சிந்தை சமைப்போம்
சுவாசக்காற்றை சுயமரியாதை யோடிணைப்போம்
சித்தம் மாறா நேர்மை கொள்வோம்
சிரமே போகினும் உரிமை காப்போம் 
தற்பெருமை பேசுவோருக்கு 
தரமான பதில் ஒன்று உண்டெனில்  
அது தரம் தாழ 
தக்க நேர மௌனம் 

உண்மையின் வீரம் 
உறங்கி போன மனதை எழுப்பும் 

புலம்பி புலம்பி 
புண் மொய்த்த இதயங்கள் கூடும் 
புதியதொரு வழி பிறக்கும்