நானும் உங்காத்தாளும் ஒன் ஞாபகமா
ஊருல வலம் வரோமையா
கைகாலெல்லாம் சொகமா இருக்குதாயா
வேலவேலைக்கு கஞ்சி குடுச்சுரியா
சாகடிக்கிற வெயிலடிக்குதுனு சேதி கேட்டேன்
வெயில்ல ரொம்ப அலையாதையா
நீ மொத தடவ அனுப்புன பணத்த
மடில கட்டிட்டு ஊர் முழுக்க
எம்புள்ள எம்புள்ளனு ஒன வித்துப்புட்டா உங்காத்தா
ஏழெட்டு மாசம் போக
உங்காத்தா என பாத்து கேட்டா
' முப்பதுக்கு முந்நூறு வாங்கி
அவன படிக்க வச்சியே
இப்டி முந்நூறு மயிலு தள்ளியிருந்து
பணம் அனுப்பவா?
இதுக்கு எம்புள்ள படிக்காம இருந்துருந்தா
எம்பக்கத்திலேயே இருந்துருப்பான்'-னு
காதுல கேட்டதும் ஆடிப்போயிட்டேன் சாமி
ஊருபக்கமே வராம
காசு மட்டும் அனுப்பிட்டே இருக்கேல
அதன் உங்காத்தாளுக்கு
ஒன் உருவம் கண்ண குத்திருச்சு போல
பக்கத்து வீட்டு பரமசிவம் இறந்ததுக்கு
அவென் புள்ள தந்தி அனுப்சானாம்
பொணத்த ரெண்டு நாள் வச்சுருக்க சொல்லி
வேல முடிஞ்சு வந்துறேன்னு
பரமசிவம் சொன்னது சரியா போச்சு
'கல்யாணம் காதுகுத்துனா ஞாயித்துக்கெழம வச்சாத்தான்
எம்புள்ள வருவேன்னு சொல்லுவான்
சாகுற காலத்துல எம்புள்ள பக்கத்துல இல்லையே
ஞாயித்துக்கெழமையா பாத்து எனக்கு சாவு வரணும்னு
அந்த ஈசன வேண்டிட்டு இருக்கேன்'- னு
அவென் பயந்தது சரியா போச்சையா
வேல வேலைனு நீயும் சுத்திட்டே இருக்க
எனக்கும் இந்த மாதிரி சாவு வந்துருமோனு
பயமா இருக்குதியா
வேல போனா போகுது
இங்க வந்துரியா
கூழோ கஞ்சியோ வெவசாயம்
பாத்து சேந்து குடிச்சுக்கலாமியா
சாகப்போற காலத்துல
எங்க நெஞ்சுல இருக்க ஆச இதுதாயா
நீ எங்க கூட இருக்கணும்னு
உங்காத்தாளுக்கு சொன்ன தைரியமும்
இப்ப என்கிட்ட இல்லையா
வயசாகி போச்சுல
அதன் புத்தி மங்கி போயி
ஏதேதோ சொல்லிப்புட்டேன்
கவலைப்படாம நீ வேல பாருயா
உங்காத்தாள நா தேத்திக்கிறேன்
அடுத்த கடுதாசி கொஞ்ச நாள் கழுச்சு போடுறேன்
No comments:
Post a Comment