உதாசினப்படுத்த தயார்நிலையில்
மனிதர்கள் ஒருபுறம்
உரிமைக்கான உரத்த குரலோடு
மிருகங்கள் மறுபுறம்
குறை சொல்லி பழக்கப்பட்ட
மனிதன் முதலில் ஆரம்பித்தான்
'மிருகமே! மிருகமே!
நீங்கள் செய்வது தரங்கெட்ட காதல்'
'துணையிருக்க பிறர் துணை
காணாதிருப்பது தான்
தரங்கெட்ட காதலா?' மிருகம் கேட்டது
'ஒருவனுக்கு ஒருத்தியென வாழ்கிறோம்
உங்களை போல் பார்ப்போர் மீது
பார்த்தயிடத்தில் உறவு கொள்வதில்லை' என் முடித்தான்
'எங்களை போல் வாழும்
ஆங்கிலனிடம் தான்
நீங்கள் கைநீட்டி காசு வாங்குகிறீர் - அவன்
கலாச்சாரம் இங்கு வர ஏங்குகிறீர்' என சொன்னது
வாய்மூடிப் போனான் மனிதன்
வாயில்லா பிராணி
வாய் திறக்க ஆரம்பித்தது
'எங்களின் காதலை பற்றி
உங்களுக்கென்ன தெரியும்
நீங்கள் எங்களிடம் புலம்புவது போல்
நாங்கள் உங்களிடம் புலம்பினோமா?
உங்களின் காதலை பற்றி எங்களுக்கு தெரியும்
பயங்கொள்ள வேண்டாம்
நம்பிக்கை துரோகம் செய்வது
எங்களின் வழக்கமன்று
உங்கள் காதலை உங்களை போல்
ஊரறிய இழிவு படுத்தமாட்டோம்
எங்களின் காதல் தரங்கெட்டதென
நீங்கள் மட்டும் சொல்லாதீர்'
'மனிதனே!
ஊரறிய உறவுகொள்ளும் நாங்கள்
உங்களைப்போல் உல்லாச காதல் செய்வதில்லை
நாங்கள் காதலில் காமத்தை மட்டும் காண்கிறோம்
உண்மையை சொல்ல
உங்களை போல் தயங்குவதில்லை
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
நீங்கள் காதலில் காதலை மட்டும் காண்கிறீர்களா?'
'ஒத்துக் கொள்கிறோம்
ஒரு காலத்தில் உயர்வான காதல் செய்தீர்
அன்று எங்கள் காதல் தரங்கெட்டதே - இன்றோ
எங்களின் காதலை விட
பன்மடங்கு தரங்கெட்ட காதல் செய்கிறீர்
ஆதலால் தான் எங்கள் காதலை
தரங்கெட்டதென சொல்லாதீர் என்கிறோம்'
'மானம் பெரிதென
வாய் வார்த்தையில் சொல்லும் மனிதர்களே!
கொடிது கொடிது மனிதக்காதல் கொடிது
அதனினும் கொடிது
மனிதம் மறந்த மனிதக்காதல் கொடிது'
என சொல்லி முடித்தன
இல்லை இல்லை
என சொல்லி முடித்தனர்
மனிதர்கள் வாய்மூடிக் கிடந்தன
No comments:
Post a Comment