ஆபத்து தான்
சக்கரமோ?
அலையோ?
கடற்கரையில்
அசிங்கங்கள் தாங்காமல்
ராட்சஷா அலையால்
உலகை எச்சரித்தாயோ?
கால் முளைத்த
கவிதை என
வர்ணிக்கப்பட்ட குழந்தைகள்
என்ன செய்தனவோ?
முதியோர்கள் கயவரல்லார்
என்ன செய்தனரோ?
இவர்கள் கடலில் கலக்க
காரணம் என்னவோ?
பிள்ளை அழுதால்
பால் கொடுக்கும் தாய்
இன்று
குழந்தைக்காக அழுகிறாள்
விளையாட சென்ற பிள்ளைகளை
வீடு திரும்ப செய்யாமல் செய்த
வினையின்
விளையாட்டைப் பார்த்தால் பயங்கரம்
காலையில் ஊடல் கொண்டு
மாலையில் மதி மயங்கி
மஞ்சம் தேடியோர் - இன்று
தனியே வாடுகின்றனர்
உடற்பயிற்சி செய்தவர்களின்
உடையற்ற உடலை
இன்று
கடற்கரை மணலில் கண்டெடுக்கிறார்கள்
இயற்கையை காலையில்
ரசிக்க வந்தவர்கள் எல்லாம்
இயற்கையோடு
இறுதிப்பயணம் மேற்கொண்ட கொடூரம்
பாத சுவடுகளை மட்டும்
கரைத்துக் கொண்டு இருந்தாய் - இப்போது
பாதங்களோடு
கொண்டு சென்றாய்
கடலின் உப்பு
இனி
அதிகரிக்கும்
எங்களின் கண்ணீரால்
கடற்கரை
இனி
எங்களின் சோகம் பாடும்
மயான கரை
தாயிழந்து தந்தையிழந்து
நிற்கும் பிள்ளை
இனி
படிக்குமோ? பிச்சை எடுக்குமோ?
மக்களைப் பெற்றெடுத்து
மகிழ்ச்சியுடன் இருந்தவர்கள்
இனி
முதியோர் இல்லமோ? பிச்சை எடுப்பாரோ?
வீடு இழந்தால் கட்டிக் கொள்வோம்
சொத்திழந்தால் பெற்றுக் கொள்வோம்
இங்கு
தாலி இழந்து நிற்கும் பெண்களின் கதி என்னவோ?
இவர்களுக்கு உதவ
ஊர் ஊராய் திரளும்
மனிதநேயம் கொண்ட மக்களின் பாதம்
தொட்டு வணங்குகிறேன்
No comments:
Post a Comment